சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதில் ஆன்மிகம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவாளருமான மகேஸ்வரி சற்குரு கலந்துகொண்டு பேசுகையில்: கண்ணதாசன் பற்றி மிக எளிமையாகச் சொல்வதானால், கவிதைகளையும் சினிமாப் பாடல்களையும் தமிழில் அற்புதமாக எழுதிய கவிப்பெட்டகம். 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 7 தொகுதிகளாகத் தனிக் கவிதைகள், 10 காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், நாவல்கள், கட்டுரைகள், தன்வரலாறு என எண்ணற்ற படைப்புகளைத் தந்துள்ளார்.
கிருஷ்ணகீதம், அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற நூல்கள் மூலம் தத்துவம், காதல், ஆன்மீகம், பக்தி எனப் பல தளங்களில் வானம்பாடியாகப் பறந்தவர். பாரதியாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டவர். ஆழ்வார்கள் மீதும் திருப்பாவை மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று பேசினார்.
பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கி பேசுகையில்: கண்ணதாசன் சாதாரண மனிதர் அல்லர். அவர் ஒரு கவிப் பெட்டகம். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் எனப் பல பெரும் படைப்புகள் மூலமாவும், ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள் மூலமாகவும் வாழ்வியலின் ஆழமான தத்துவங்களை மிக எளிமையான தமிழில் மக்களுக்குப் போதித்தவர் என்று பேசினார்.
விழாவில், பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
