காந்திகிராமிய பல்கலைக்கழகத்தின் ஊரக கல்வி மையத்தில் 1972–1976ஆம் ஆண்டு டிப்ளமோ இன் ரூரல் சர்வீஸ் துறைகளில் பயின்ற 55 முன்னாள் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து 50வது ஆண்டு பொன்விழாவை இரண்டு நாட்கள் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான அண்ணாமலை, முருகபதி, முத்துவேல் உள்ளிட்ட 55 வகுப்பு நண்பர்கள் ஒருங்கிணைந்து செய்தனர்.
விழாவில், தங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த பேராசிரியர்கள் நாராயணசாமி, கன்னியப்பன், பிரபாகரன், நாகராஜன், குருவம்மாள் மற்றும் சூரியகாந்தி ஆகியோரை முன்னாள் மாணவ மாணவிகள் கௌரவித்தனர்.
முதல் நாள் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாகமாக தொடங்கியது. ஆண்கள் வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் பச்சை நிற பட்டுச் சேலை அணிந்தும் அணிவகுத்து வந்தனர். பின்னர் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த முன்னாள் மாணவரும், நிதி மேலாண்மை தலைமை நிபுணருமான அண்ணாமலை கூறியதாவது: காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு ஊரக மையத்தில் பயின்று இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மிகப்பெரிய மரியாதையும் கௌரவத்தையும் கொடுத்த கல்வி மையத்தை மரியாதை செலுத்தும் வகையில் 50வது பொன்விழா ஆண்டை இன்று நாள் சிறப்பாக கொண்டாடினோம் என்றார்.
