ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கே.பி.ஆர். நிறுவனத்தின் சமூகநல பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் முழுமையாக புனரமைத்து புதுப்பிக்கப்பட்ட மூன்று வகுப்பறைக் கட்டடங்கள், நூலகம், கணினி வசதிகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் திறப்பு விழா நடைபெற்றது.
கே.பி.ஆர். குழுமம் சார்பில் பள்ளி வளாகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நூலகம், நவீன கற்றலுக்கான கணினி அமைப்புகள், ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் மற்றும் கல்வி சார்ந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விழாவில் கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் கல்வி வசதிகளை திறந்து வைத்தார். அரசு பள்ளி மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும், கல்வி சூழல் மேம்படுவதற்கும் இத்தகைய சமூகப் பங்களிப்புகள் முக்கியமானவை என தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் என்றும், நூலகம் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் என்றும், கணினி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, புரிதல் திறன் மற்றும் நவீன கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவும் என்றும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.
விழாவில் அரசு பள்ளி மேம்பாட்டிற்காக மேலும் பல உதவிகள் புரிந்த தனியார் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
