நிறுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் (பர்ஸ்ட் ரெஸ்பாண்டர்) சேவையை மீண்டும் தொடங்கி, மலைப்பகுதிகளில் அவசர மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சங்கத்தின் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கோவை வ.உ.சி. பூங்காவில் நடைபெற்றது.நடைபெற்றது அதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதை போலவே, தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

விபத்துக்கான அவசர அழைப்புகளை உரிய நேரத்தில் அருகிலுள்ள ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்க இ.இ.எம்.எஸ். எனும் ‘என்டர்பிரைஸ் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ டிஜிட்டல் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதிலும், ஜி.பி.எஸ். எனும் புவி இடம் காட்டி தொழில்நுட்பத்திலும் குறைபாடுகள் உள்ளன. எனவே இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.