விவசாய நிலத்தின் அங்கக கரிம அளவை அதிகப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உலகளாவிய போட்டியில் விருது வென்ற இயற்கை விவசாயியான தமிழகத்தைச் சேர்ந்த வள்ளுவனுக்கு, கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்வியாளர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், விவசாயி வள்ளுவனுக்குச் சிறப்புச் செய்தார்.
கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், வள்ளுவன் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர். பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதிக்கு வந்து, 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் துவங்கி உள்ளார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கினார்.
7 ஏக்கரில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து இன்று கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இவருடைய மாபெரும் வெற்றிக்கு பின்னால் இரண்டு முக்கியத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறினார். முதல் தாக்கம் சத்குரு, இரண்டாவது தாக்கம் நம்மாழ்வார். விவசாயிகளுக்கு இன்னொரு தாக்கமும் வர வேண்டும், அது மகாத்மா காந்தியினுடைய தாக்கமும் வர வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன்.
‘இந்தியாவின் கலாச்சாரமே விவசாயம்தான்’ என்றார் சர்தார் வல்லபாய் பட்டேல். ‘மற்ற அனைத்தும் காத்திருக்கலாம், ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது’ என்றார் ஜவஹர்லால் நேரு. ஆகவே, விவசாயத்திற்கு எப்போதுமே அழிவில்லை” எனக் கூறினார்.
கே.பி. ராமசாமி பேசுகையில், நமது நாட்டில் எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளும், ஐயா நம்மாழ்வார் போன்றோரும் பாரம்பரிய விவசாயம் குறித்து எத்தனையோ புத்தகங்களை எழுதினர். எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆனாலும், நம் நாட்டு விவசாயிகள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வள்ளுவன் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் வழிகாட்டுதலில், மரம் சார்ந்த பலபயிர் பல அடுக்கு சாகுபடி முறையில் வள்ளுவன் விவசாயம் செய்து வருகிறார். நிலத்தை அதிகமாக உழாமல் இருப்பது, மூடாக்கு போடுவது, உரப்பயிர்களை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகளால் இவரது நிலத்தில் மண் வளம் உயர்ந்துள்ளது.
ஒற்றைப் பயிர் சாகுபடி நிலமாக இருந்த தனது தோட்டத்தை, பல வகை மரங்கள், மிளகு, பழச்செடிகள் நிறைந்த ‘உணவுக் காடாக’ மாற்றியுள்ளார். இதன் விளைவாக, மண்ணின் கரிமக் கார்பன் அளவு 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவரது சாதனையைப் பாராட்டி, கடந்த 2024ம் ஆண்டு ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய “மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள்” என்ற விவசாயிகளுக்கான போட்டியில் இவருக்கு உலகளாவிய உயரிய அங்கீகாரம் கிடைத்தது.