மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் “சுவச்சதா பக்வாடா” தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு, பாரத் பெட்ரோலியம் குழாய் பிரிவின் நிர்வாக இயக்குநர் பிஜு கோபிநாத் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலாத்துறை இணை அமைச்சர்  சுரேஷ் கோபி கலந்து கொண்டு, சுவச்சதா பக்வாடா தகவல் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தூய்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பதும் அனைவரின் பொறுப்பாகும்.

விண்வெளி செயல்பாடுகள், அதிக புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை அதிகமாக பாதிக்கின்றன. இதற்கு மாற்று முறைகளை கண்டறிய வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

எந்த அளவிற்கு பூமியைப் பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு அதன் பயனை அடைய முடியும்.  தூய்மையான இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரம் நடு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஷ்வரன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.