கோவை மாநாகராட்சியில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 84, 86 மற்றும் 62 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கும் கரும்புக்கடை-சாரமேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாலை விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் சார்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கரும்புக்கடை–சாரமேடு சாலை முக்கிய இணைப்புச் சாலையாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் இந்த வழியாக பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலையின் அகலம் குறைந்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால சேவை வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் நிலவுவதாகவும், பள்ளி மாணவர்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் அகற்றி, திட்டமிட்டபடி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேலும், போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவை பெற்ற அதிகாரிகள், உரிய ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
