கோவையில் ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம், உக்கடம் மற்றும் வெள்ளலூர் பகுதிகளில், தற்போது தெருநாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2022 மேற்கொள்ளப்பட்ட, தெருநாய் கணக்கெடுப்பின் படி 1,11,074 தெருநாய்கள் உள்ளன. இதில் தற்போது வரை 40,705 தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, 52,472 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளலூர் மற்றும் வெள்ளகிணறு பகுதிகளில் தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பு ஊசிகள் செலுத்தும் வகையில் புதிதாக 2 மையங்கள் கட்டப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

வெள்ளலூர் பகுதியில் சுமார் ரூ.46 லட்சம் செலவில் 10,000 சதுரடி பரப்பளவில், தெருநாய்களுக்கான பராமரிப்பு மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு,  இனப்பெருக்க கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும், உணவுகள் வழங்கியும் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.