சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் சுமார் 1,000 இடங்களிலும், தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இலவச யோக வகுப்புகள் நடத்தப்பட்டன.

சிறப்பு யோகா வகுப்புகளில், நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், முப்படையினர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்புகளில், மிராக்கிள் ஆப் மைண்ட் தியானம் மற்றும் சூர்ய சக்தி உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.

சத்குருவின் யோக தின வாழ்த்து செய்தியில், நாம் யோகா என்று அழைப்பது ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ, நம்பிக்கை முறையோ அல்லது மதமோ அல்ல என்பதை நினைவூட்டும் ஒரு நாள் தான் சர்வதேச யோகா தினம். இது உள்நிலை நல்வாழ்விற்கான அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். உங்கள் மதம், இனம், சாதி, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் உங்களை ஒரு உன்னதமான நிலைக்கும் உடல், மனம், உணர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல்களில் உச்சகட்ட செயல்பாட்டிற்கும் கொண்டு சேர்க்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ தியானம் புதியதாக 6 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கூடுதலாக கன்னடம், மலையாளம், குஜராத்தி, பங்களா, இத்தாலியன் மற்றும் நேபாளி ஆகிய மேலும் 6 மொழிகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில், விரைவு அதிரடிப்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

கோவையில் உள்ள ஐ.என்.எஸ் அக்ரானி, 43 விங் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் மற்றும் ஏர் வாரியர் ஆகிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன. மேலும், மதுக்கரை 195 ஃபீல்ட் ரெஜிமென்ட் ராணுவ முகாமிலும் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதவிர, உதகை வெலிங்டன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ராணுவப் பயிற்சி கல்லூரி வளாகத்திலும் ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.