ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும்.

சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.