கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில்பயணித்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று எதிரே வந்த 2 சக்கர வாகனத்தின் மேல் மோதக்கூடாது என ஓட்டுநர் எடுத்த முடிவில் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கணுவாய் – துடியலூர் சாலையில் இயங்குகிறது அவனி பப்லிக் பள்ளி (AVANI PUBLIC SCHOOL). வழக்கம் போல் பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி வாகனம் வரும் போது தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் எதிரே வந்ததாக தெரிகிறது.

இளைஞர்கள் மீது மோதிவிட கூடாது என்பதற்காக பள்ளி வாகனத்தை ஓட்டுனர் திருப்பி உள்ளார்.அதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளி வாகனம் அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள், ஓட்டுனர், அந்த இளைஞர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.பின்னர் அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை வாகனத்தில் இருந்து வெளியேற்றி அப்பள்ளிக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் பள்ளியில் இருந்து மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தடாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.