சர்வதேச அரசியல் சூழல் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மேல் நடந்தும் தாக்குதலாலும், ஈரான் தொடுக்கும் பதில் தாக்குதலாலும் ஆட்டம் கண்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் சூழலின் விளைவாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உலக அளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.

DIESEL lorry protest 2 scaled

இதை கண்டித்து இன்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டத்தை கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடத்தியது. இதில் கோயமுத்தூர் கனரக லாரி உரிமையாளர்கள் நல டிரஸ்ட் பங்கேற்றது.

இதில், டீசல் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும், வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், ஆன்லைன் அபராத முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

DIESEL lorry protest 3 scaled

இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் பேசுகையில் அவர்கள் கூறியதாவது :-

இன்று 300-350 பேர் தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள டீசல் விலைவாசி உயர்வால், லாரி துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமில்லாது சாமானியர்களுக்கு பாதிப்பு உள்ளது. உப்பு, உணவு முதல் அனைத்து முக்கிய பொருட்களின் விலையும் உயரும். எனவே மத்திய அரசும் மாநில அரசும் டீசல் விலையை குறைக்க முன்வரவேண்டும்.

DIESEL lorry protest 5 scaled

1 லிட்டர் டீசலின் விலையில் இருந்து ரூ.17 வரியாக மாநில அரசுக்கு செல்கிறது. சென்ற ஆட்சியின் போது, அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அரசுக்கு வரும் வரியில் இருந்து ரூ.3யைக் குறைக்க உத்தரவிட்டார். அதுபோல இப்போதைய தமிழக முதலமைச்சரும் முடிவெடுத்தால் டீசல் விலை குறையும்.
மத்திய அரசும் மாநில அரசும் மனது வைத்தால் இதை செய்ய முடியும்.

நாங்கள் இன்று எங்கள் துயரத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோம். விரைவில் அகில இந்திய தலைமையிடம் பேசி, அனைத்திந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா தலைமையில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு வழங்குவோம். மாநில அளவில் எங்கள் தலைவர் தமிழக அரசிடம் மனுகொடுப்பார். இதற்கான தீர்வு விரைவில் காணப்படவேண்டும்.
இவ்வாறு கூறினர்.