சுமார் ரூ.4 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட தனியார் வங்கி தான் ‘கோடக் மஹிந்திரா பேங்க்’. இது இந்தியாவின் மிக நம்பகமான, சிறப்பாக செயல்படும் ஒரு தனியார் வங்கி என்று அறியப்படுகிறது.

இந்த வங்கியின் நிறுவனர் உதய் கோடக் (67) இந்தியாவின் மிக மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவர். ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்களை கொண்டவர் என்றாலும் வாழ்க்கை, தொழில், நிதி நிர்வாகத்தில் மிக தெளிவான அறிவுரைகளை சரியான தருணங்களில் வழங்குவதில் இவரின் நண்பர் ஆனந்த் மஹிந்திரா போல இவரும் கெட்டிக்காரர்.

சமீபத்தில் இவர் கூறிய கருத்து ஒன்று இந்திய தொழில்துறையின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதுதொழில்துறைக்கு மட்டுமல்லாது சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் தேவையானதாக பார்க்கப்படுகிறது.

என்ன சொன்னார் உதய்?

“கையில் காசு மிகுதியாக கொண்ட நிறுவனம் தான் கூகுள். அதன் ஆண்டு லாபம் மட்டும் ரூ.16 லட்சம் கோடி. அதன் சந்தை மதிப்பு ரூ. 450 லட்சம் கோடி. கிட்டத்தட்ட இந்தியாவில் பங்கு சந்தைகளில் பதியப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்புகளுக்கு இணையானது இந்த தொகை.”

“இவ்வளவு இருந்தும் அடுத்து வரக்கூடிய தேவைகளுக்காக அந்த நிறுவனம் ரூ. 8 லட்சம் கோடி நிதியை திரட்டி உள்ளது. ‘இன்றைய நிலை எதுவாயினும் எதிர்காலம் மேல் கண்ணை வை’ என்கிறது கூகுள் நிறுவனத்தின் இந்த செயல்.”

விழித்து கொள் என உணர்த்தும் அழைப்பு மணிபோல அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய செய்தியை இது சொல்கிறது, என கூறுகிறார் உதய்.

ரூ.450 லட்சம் கோடி மதிப்பு கொண்ட கூகுள் நிறுவனமே அதன் எதிர்காலத்திற்கு தேவை என்னவோ அதை திட்டமிட்டு, அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டும் வழக்கம் கொண்டதாக உள்ளபோது, நாம் நிச்சயம் இதுபோல திட்டமிட்டு எதிர்காலத்தின் தேவைக்காக நிதி திரட்டி வைத்துக் கொள்ளக்கூடாதா?