நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள், தேர்வு நிறைவடையும் ஜூன் 21 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், மறுதேர்வு எந்தவித சர்ச்சையுமின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக தேசிய தேர்வு முகமை பல்வேறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வினாத்தாள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளி உலகத்துடனான தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இணைய அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் தொடர்பான எந்தவித தகவல் கசிவும் ஏற்படாத வகையில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.