இன்றைய டிஜிட்டல் உலகில் பலருக்கும் இரவு நேரம் தாமதமாக உறங்கச் செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. தூக்கம் வரவில்லை என்றால் டிவி பார்ப்பது, ஸ்மார்ட்போனில் நேரம் செலவிடுவது போன்ற பழக்கங்கள் காரணமாக பலர் இரவு 11 மணி, 12 மணி அல்லது அதற்கும் மேலாக விழித்திருப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரம் உடலின் இயற்கை மீளுருவாக்க செயல்பாடுகளுக்கான முக்கியமான காலம். இந்த நேரத்தில் மெலடோனின் எனப்படும் தூக்க ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. மேலும், ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதற்கும் இந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் அவசியமாகிறது.
இந்த நேரத்தில் தூங்காமல் இருப்பது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் இயற்கை உடல் கடிகாரத்தை பாதித்து, வளர்சிதை மாற்றக் கோளாறுகள், மனஅழுத்தம் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆய்வுகளின் படி, இரவு 10 மணிக்குள் அல்லது அதற்கு முன்பாக உறங்கச் செல்வோருக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது. போதுமான மற்றும் தரமான தூக்கம் இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
இரவில் சரியான நேரத்தில் தூங்கினால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். இதனால் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். பதற்றம், கவலை, மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.
குழந்தைகள் இரவு 10 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை கடைப்பிடித்தால், அவர்களின் கல்வித் திறன் மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்ல தூக்கம் மூளை வளர்ச்சி, நினைவாற்றல், கவனத்திறனுக்கு உதவுகிறது.
நல்ல ஆழ்ந்த தூக்கம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய்கள் மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும், தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். வார இறுதி நாட்களிலும் இதையே கடைப்பிடிக்க வேண்டும்.
