அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக வேடபட்டி பொறுப்பாளர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நீண்ட காலமாக மக்களுக்கான சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பொறுப்பிலும், தொண்டாமுத்தூர், வேடபட்டி போன்ற பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்.
மேலும், நல்லறம் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால கட்டங்களில் பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்தி அயராது மக்கள் சேவையில் பணியாற்றியுள்ளேன்.
ஆனால், தற்போது கழகத்தில் நடைபெறும் குழப்பங்களால் எனது மனம் கழகத்தில் உற்சாகமாக பயணிக்க இயலாத காரணத்தினால் நான் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று முதல் விலகிக் கொள்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதலால் எனக்கு இதுவரை கழகத்தில் ஆதரவளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கழக முன்னோடிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மேலும் எனது மக்கள் பணி என் மூச்சின் இறுதிவரை ஏதேனும் ஒரு களத்தில் இயங்கும் என்பதை தங்களோடு பகிர்வதில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
