சத்குருவால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை, பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள், ஈஷாவில் வழங்கப்படும் யோகா, தியானங்கள் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்விற்காக சம்யமா தியான பயிற்சியை மேற்கொண்டவர்கள் 40 நாட்கள் செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவுகளின் படி, மூளையின் வயது, உண்மையான வயதை விட கணிசமாக இளமையாக இருப்பது கண்டறியப்பட்டது. மூளையின் வயது சராசரியாக 5.9 ஆண்டுகள் இளமையாவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உயர்நிலை தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்களின் மூளை இளமையாவதோடு அதன் வயதாகும் தன்மையும் வெகுவாக குறைந்து இருந்தது. தூக்கத்தின் தரம் மேம்பட்டு இருந்தது. ஆழமான, புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நினைவாற்றல் கூர்மையாகவும், சிந்தனை தெளிவாகவும் இருந்தது. மன அழுத்தம், தனிமையாக உணரும் தன்மை வயதானவர்களை விட குறைவாக இருந்தது.

அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவலாம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் ‘Mindfulness’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.