5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் தொடர அரசு அனுமதி; மக்கள் வரவேற்பு

கடந்த அதிமுக ஆட்சியின் போது,  துவங்கிய கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் 2021ல் திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில், இப்போது அந்த திட்டம் மீண்டும் துவங்க த.வெ.க. தலைமையிலான தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

2020 ஜனவரியில் ரூ.168 கோடி மதிப்பில் வெள்ளலூர் பகுதியில் உள்ள 61 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர முடிவு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. ரூ.50-54 கோடி அளவுக்கு கோவை மாநகராட்சி நிதி செலவு செய்து இந்த பேருந்து நிலையத்தை கட்டிவந்தது. 2021 திமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது திட்டத்தில் பணிபுரிந்த கட்டுமான பணியாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர், அதன் பின் பணிகள் வேகமெடுக்கவில்லை.

இதன் பின்னர் திட்டத்திற்கு தேவைப்படும் அணுகசாலை அமைப்பதில் சிக்கல் இருக்கிறது என்பது உள்ளிட்ட சில காரணங்களால் மீண்டும் துவங்காமல் கட்டின கட்டிடம் அப்படியே பாதியில் நின்றது. சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை கைவிடக்கூடாது எனவும், அங்கு பேருந்து நிலையம் தான் வரவேண்டும் என்பதன் அவசியத்தை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

இதற்கு நடுவே இந்த கட்டிடத்தில் காய்கறி மற்றும் பழச் சந்தையை கொண்டுவரவும், லாரி பேட்டையாக மாற்றவும் கூட சில ஆலோசனைகள் மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் கோவை மாநகராட்சி 2024ல் நிறைவேற்றியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கட்டப்பட்டு பாதியில் நிற்கும் இந்த பேருந்து நிலைய பகுதியின் அருகே சில சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 2025 மே மாதத்தில் இந்த இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இடத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கும், பேருந்து நிலையம் இருப்பதால் வெள்ளலூர் பகுதியும் வளர்ச்சி பெரும் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட விக்னேஷ், வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்திற்கு குரல்கொடுத்துவந்தார்.

இந்த நிலையில் த.வெ.க. ஆட்சி அமைந்து, அவர் அமைச்சர் ஆனதும் வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இந்த பேருந்து நிலைய திட்டம் தொடர தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறியுள்ளார். மேலும் அணுகு சாலை தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. நீலாம்பூர் புறவழிச்சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அகலப்படுத்தப்படும் எனவும் செட்டிபாளையம் – போத்தனுர் சாலையும் அதை தொடர்ந்து பின்வரும் நாட்களில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் மீண்டும் செயல்படுத்த ரூ.148 கோடி தேவைப்படுமென தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சூழலில் இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்க ஒன்று என வெள்ளலூர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது பற்றி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு நிர்வாகியும், வெள்ளலூர் பகுதியில் வசிப்பவருமான மோகன் கூறுகையில்:-

இப்பகுதியின் வளர்ச்சிக்கு இந்த பேருந்து நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் போல, திருச்சி புது பேருந்து நிலையம் போல ஒரு சிறந்த பேருந்து நிலையமாக, நவீன வசதிகளுடன் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இதை காலதாமதம் இல்லாமல் ஆரம்பிக்கவேண்டும் துவங்கவேண்டும்.

இதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது, வேகமாக இதை அவர்கள் செயல்படுத்தவேண்டும். இந்த ஆண்டில் பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அதே சமயம், பேருந்து நிலையத்துடன் லாரிப்பேட்டையும் அமைக்க ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதை கைவிட்டு வெள்ளலூரில் முழுமையான ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் மட்டுமே கொண்டுவரவேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.