கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டி, மற்றும் கோவை, ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டாக மேம்பாட்டு பணிகள் நடந்துவருகிறது. பேருந்து நிலையத்தின் ஒருபுறம் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும் அவைகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் டார்ச்லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துகளை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண் பயணிகள், முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து மின் விளக்குகளையும் எரியச் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

