ஈஷா அவுட்ரீச் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்காக துவங்கப்பட்ட “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” (அறிவியல் தீப்பொறி) திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி, கடந்த சனிக்கிழமை அன்று, கோவையில் உள்ள செம்மேடு ஈஷா இயற்கை விவசாய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

கடந்த ஓராண்டாக நடைபெற்ற இந்த “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” பயிற்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் துறைகள் குறித்து சுவாரசியமான நவீனக் கற்றல் முறைகள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. குறிப்பாக, காணொலி காட்சிப்படுத்துதல், செயல்முறை சோதனைகள், நேரடி களப்பயணங்கள், அறிவியல் கல்வி சார்ந்த திரைப்படங்கள், விளையாட்டு வழிக் கற்றல், வினாடி-வினா போட்டிகள் மற்றும் அறிவியல் விளக்கப்படங்கள் தயாரித்தல் போன்ற பன்முகத் தன்மைகொண்ட செயல்பாடுகள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சியில் இயற்பியல், நுண்ணுயிரியல், வானவியல், மண் அறிவியல், கடல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகள் குறித்த வகுப்புகள் செயல்முறை விளக்கங்களுடன் நடைபெற்றன. குறிப்பாக, ஈஷாவின் மண் ஆய்வுக்கூடத்திற்கு நேரடியாகச் சென்று மண் பரிசோதனை முறைகளை நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ளுதல் மற்றும் ரத்தினம் கல்லூரியின் அதிநவீன ஆய்வகத்திற்குச் சென்று நவீனக் கருவிகள் மூலம் நுண்ணுயிரிகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பின்பு எந்தெந்த அறிவியல் துறைகளில் என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதன் ஓராண்டு நிறைவு விழாவில் இஸ்ரோ திரவ இயக்கத் திட்ட மையத்தின் ஓய்வு பெற்ற குரூப் ஹெட் மற்றும் விண்வெளி விஞ்ஞானி மகேஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், “மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்திலிருந்தே கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி, புதுமையான செயல்முறைத் திட்டங்களை உருவாக்கப் பழக வேண்டும்.

குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகும், இளங்கலை பொறியியல் படிப்பிற்கு பிறகும் குறிப்பிட்ட சில நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் இஸ்ரோவில் பணியாற்றிக் கொண்டே உயர்கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.” எனப் பேசினார்.

இவ்விழாவில் பங்கேற்ற ரத்தினம் கல்விக்குழுமத்தின் மாணிக்கம் ராமசாமி பேசுகையில், “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க் திட்டம் கிராமப்புறக் குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு மிக அற்புதமான நல்வாய்ப்பாகும். இந்த ஓராண்டு சயின்ஸ் ஸ்பார்க் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவ-மாணவிகள் எங்களது ரத்தினம் கல்லூரியில் உயர்கல்வி சேர வரும்போது, அவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் முற்றிலும் இலவசமாகவே சேர்க்கை வழங்கிட நாங்கள் முழு மனதுடன் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.