கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வந்த சிறுமி கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில், அப்பகுதியிலுள்ள குளம் ஒன்றின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்வையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு விரைந்து வந்து, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட கண்ணம்பாளையம் குளம் பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது, குற்றவாளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய பாதைகள், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

