சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை அமர வைத்து பேச வேண்டும் என மாநில பதிவுத்துறை தெரிவித்த நிலையில், இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசு அலுவலர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநில பதிவுத்துறையின் உத்தரவின்படி, அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நின்றபடி சேவைகளை பெற வேண்டிய நிலையை தவிர்க்க, அமர வைத்து தான் அதிகாரிகள் சேவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சேவைகளை பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இருக்கை வசதி போதுமான அளவில் உள்ளதா என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஏற்பாடுகள் மூலம் அரசு அலுவலகங்களில் சேவை தரம் மேம்பட்டு, பொதுமக்களுக்கு எளிதான மற்றும் மரியாதையான சேவை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

