அடுத்த 1 ஆண்டுக்கு தங்கம் வாங்கவேண்டாம், முடிந்தவரை பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள், உணவு எண்ணெய் பயன்பாட்டை வீடுகளில் 10% குறைக்க முயலுங்கள் என பிரதமர் மோடி நேற்று பேசியதும், அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.

என்ன சொன்னார் பிரதமர்?

இந்தியாவுக்கு பெரிய பெரிய எண்ணெய் கிணறுகள் கிடையாது. நமது தேவைகளுக்கான பெட்ரோல் டீசல் எரிவாயுவை பிற நாடுகளில் இருந்து பெற வேண்டி உள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரத்தின் விலைகள் வானளவு உயர்ந்துள்ளன.

இந்தப் போர் துவங்கி நடைபெற்ற 2 மாத காலமாக இந்திய அரசு தொடர்ந்து மக்களை அதன் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முயற்சிகள் எடுத்தது, மக்கள் மீது சுமை வராதபடி அரசு முழு சுமையை தன் தோள்களில் சுமக்கிறது. ஆனால் உலகளவில் நெருக்கடி தொடரும் போது எத்தனை தீர்வுகளை எடுத்தாலும் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். எனவே நம் நாட்டை முன்னிலைப்படுத்தி நாம் ஒன்றாக போராட வேண்டும்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வது மட்டும் தேச பக்தி அல்ல, நாட்டிற்காக வாழ்வதும், நாட்டின் மீதான கடமைகளை நிறைவேற்றுவதும் தேச பக்தி தான். எனவே இந்த உலகளாவிய நெருக்கடி நேரத்தில் நம் கடமைகளை முன்னிலைப்படுத்தி சில உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். மேலும் அவற்றை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மெட்ரோ வசதி உள்ள நகரங்களில் மெட்ரோவை பயன்படுத்த முடிவு செய்யுங்கள். அவசியமானால் மட்டும் காரை பயன்படுத்த வேண்டும்.

பிற இடங்களில் அனுப்ப வேண்டிய பொருட்களை மின்சார ரயில்கள் மூலம் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும். மின்சார வாகனம் வைத்துள்ளவர்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

உணவு எண்ணெய்க்கு அதிகமாக வெளிநாட்டு நாணயங்கள் செலவு செய்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் உணவு எண்ணெய் பயன்பாட்டை 10 % குறைத்தால் அதுவும் ஒரு பெரிய தேச பக்தி செயல்.

கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்க பழகி இருக்கிறோம். இன்று காலத்தின் தேவை உள்ளது என்பதால் அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவோர் அதை செய்யலாம். ஆன்லைன் கூட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இன்றைய சூழலில் வெளிநாட்டு நாணயங்களை சேமிக்க நாம் மிகுந்த முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்கு நமது சிறிய முயற்சிகளும் நாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும்.

திருமணம் தொடர்பாக வெளிநாடு செல்லுதல், விடுமுறைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்லுதல் எனும் பழக்கம் அதிகரித்துள்ளது. இப்போதைய சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வெளிநாடு செல்லாமல் இருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தியாவில் ரசித்து பார்க்க இடங்கள் ஏராளம் உள்ளது.

தங்கம் வாங்கும் நடவடிக்கைகளுக்கு அதிகமாக வெளிநாடு தானியங்கள் செலவாகிறது. நாட்டின் நலனுக்காக ஒரு வருடத்திற்கு எந்த விழாவாக இருந்தாலும் தங்க நகை வாங்காமல் இருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

வெளிநாட்டு நாணயங்களை சேமிக்க வேண்டும் என்பதை நான் தொழில் அமைப்புகளிடம் வேண்டுகோளாக வைக்கின்றேன். இத்தகைய விஷயங்கள் மேல் கவனம் செலுத்துங்கள். இந்தியாவை தன்னிறைவடைய  கவனம் செலுத்த வேண்டும்.

பிரதமர் கூறியதன் பின்னணி என்ன?

தங்கம் மற்றும் எரிபொருளைப் பொறுத்தமட்டில் இந்தியா தனது தேவைகளுக்காக இவற்றை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடாகவே இருக்கிறது. இதுபோன்ற இறக்குமதிகளுக்கு நாம் அமெரிக்க டாலர்களிலேயே நம்முடைய கட்டணத்தை செலுத்துகிறோம். இந்த நிலையில் உலக அளவில் போர் சூழல் நிலவும் போது,  இந்தியா அதன் அந்நிய செலாவணியை அதிகம் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அந்நிய செலாவணி என்றால் ஒரு நாடு, பிறநாட்டு பணங்களையும் (முக்கியமாக அமெரிக்க டாலர்களை) தங்கம் போன்றவற்றையும் தனது மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் அதிக அளவு வைத்துக்கொள்வது. 1 ஆண்டுக்கு தேவையான அந்நிய செலாவணி கையில் இருந்தால், மிக முக்கியமாக தேவைப்படும் சூழலில் அவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அது உதவியாக இருக்கும் என்பதால் இதை பலப்படுத்த வேண்டியுள்ளது.

இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் எனும் சர்வதேச நிதி நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி இந்தியாவை விட்டு அதிக டாலர்கள் செல்லுமே தவிர உள்ளே வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பிரதமர் இது போன்ற விஷயங்களை கூறியிருக்கிறார்.

நம்முடைய கச்சா எண்ணெய் தேவைக்காக 88 % நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். இந்தியா உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் இரண்டாவது நாடாக உள்ளது. தங்கத்தினுடைய இறக்குமதி குறைந்தால் இந்தியாவை விட்டு டாலர்கள் வெளியே செல்வது குறையும்.

போர்சூழல் காலத்தில் தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதால் உலக அளவில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். எனவே அதிகமானோர் தங்கத்தை வாங்குவார்கள். இதனால் ரூபாயை விட டாலர் மதிப்பு உயர்ந்திருக்கும். இப்போது அதிக தங்கம் தொடர்ந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டால் அதிகப்படியான டாலர்கள் இங்கிருந்து செல்லுமே தவிர நம்மிடம் கையிருப்பு இருக்காது.

அசாதாரண சூழல் தொடர்ந்தால், அப்போது முக்கியமான பொருட்களைக் நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் எழும்போது, நம்மிடம் கையிருப்பில் அதிகமான டாலர்கள் இருக்க வேண்டும். எனவே அந்நிய செலாவணியை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இப்படியொரு கோரிக்கையை பிரதமர் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியின் விமர்சனம்

“மோடிஜி நேற்று பொதுமக்களிடம் சில தியாகங்களை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெயைக் குறைத்துக் கொள்ளுங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என கூறினார். இவை உபதேசங்கள் அல்ல – இவை தோல்விக்கான சான்றுகள்.”

“12 ஆண்டுகளில், அவர் நாட்டை எந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார் என்றால், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக் கூடாது என்று பொதுமக்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், அவர்கள் பொறுப்பில் இருந்து தப்பிப்பதற்காக, பொறுப்பை மக்கள் மீது சுமத்துகிறார். நாட்டை நடத்துவது என்பது சமரசம் அடைந்த பிரதமரின் கைக்கு எட்டாத நிலையில் இன்று உள்ளது,” இவ்வாறு ராகுல் விமர்சித்தார்.