தமிழக அரசியல் வரலாற்றில், 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சி.ஜோசப் விஜய் நேற்று தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய முதல்வரின் புகைப்படங்களை வைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை இருந்த பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு, புதிய முதல்வர் விஜய்யின் புகைப்படங்களை அலங்கரிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு, கூட்டரங்கு மற்றும் உயர் அதிகாரிகளின் அறைகளில் புதிய முதல்வரின் உருவப்படங்கள் மின்னத் தொடங்கி உள்ளன. பல தசாப்தங்களாக நிலவி வந்த இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதியதோர் அரசியல் மாற்றத்தை மக்கள் தந்துள்ள நிலையில், இந்த புகைப்பட மாற்ற நிகழ்வு பொதுமக்களை கவர்ந்துள்ளது.

குறிப்பாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய முதல்வரின் புகைப்படங்கள் மாட்டும் போது, அதை அங்கு இருந்தவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.