கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஷேசயர் ஹோம்ஸ் மற்றும் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் கை, கால் மூட்டு எலும்பு வளைந்த 1 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாமை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பிசியோதெரபித்துறை தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜியின் ஆலோசகர் டாக்டர் பாலாஜி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் ஆர்த்தோபிடிக் துறை தலைவர் டாக்டர் தினகர் ராய் துவக்கி வைத்தனர்.
இந்த முகாம் குறித்து பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் குழந்தைகள் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் கூறியதாவது:- பிறவியிலிருந்து கை, கால் மூட்டு எலும்பு வளைந்த சிறுவர்கள், பொருளாதார சவால்களால் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்குடன் இந்த முகாமை ஷேசயர் ஹோம்ஸ் மற்றும் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை உடன் இணைந்து நடத்துகிறோம்.

குழந்தைகளின் கை, கால்கள் பிறவியிலிருந்து வளைந்தோ அல்லது அவர்கள் நடக்கும் போது வித்தியாசம் உள்ளது என்றால் அதை பெற்றோர்கள் அவசியம் பரிசோதித்து கொள்வது நல்லது. இந்த முகாமில் அதற்கான ஆலோசனைகள் மற்றும் தேவைப்படுவோருக்கான மருத்துவ சிகிச்சைகள், அவர்கள் கை கால் நகர்வுகளை எளிதாக்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் கூட இலவசமாக வழங்கப்படும்.
இந்த முகாம் இந்த வாரம் முழுவதும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ள குழந்தைகள் நலம் பெற இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

