மத்திய கிழக்கு பிராந்திய போர் நெருக்கடியால் இந்திய தொழிற்சாலைகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளதற்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ECLGS 5.0 என்ற நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு பிரதமர், நிதி அமைச்சர், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. இந்த நிதி உதவி திட்டம் மிகுந்த சிரமத்தில் இயங்கி வரும் பஞ்சாலைகள் வாராக்கடன் சொத்துக்களாக ஆவதை தடுப்பதுடன் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பெரிதும் உதவும்.
ECLGS 5.0 திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தவிர பெரிய தொழில்களுக்கும் 31 மார்ச் 2027 வரை பெறப்பட்ட ஐந்து ஆண்டுகால கடன்களுக்கு ஒரு வருட காலத்திற்கு கடன் தவணை தள்ளிவைத்திருப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
நடப்பு நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து புதிய ஜவுளி திட்டங்களும், சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சகம் பருத்தி உற்பத்தி திறன் திட்டத்தை அமலபடுத்த ரூ. 5659.22 கோடியை ஒப்புதல் அளித்துள்ளது போன்றவை ஒட்டுமொத்த இந்திய ஜவுளி தொழிலுக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
