கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில், தனியார் மாம்பழத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சுமார் 8.40 மணி அளவில், போளுவாம்பட்டி பிளாக்–1 காப்பு வன எல்லைக்கு அருகிலுள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந் தோட்டத்தில் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் மற்றும் கருகிய தடயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின்மாற்றி அல்லது தாழ்வாக சென்ற மின்கம்பியை யானை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாம்பழத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா, அல்லது விதிமுறைகளை மீறி மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்ததா என்பது குறித்து ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய அலட்சியம் அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பற்ற மின்வேலிகள் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காரணமாக யானைகள் அடிக்கடி பலியாகும் சம்பவங்கள் தொடர்வதால், மின்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.