கடுமையான வெயிலைச் சமாளித்து, பொழுது சாய்கையில் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வீடு திரும்புபவர்கள் ஏராளம். ஆனால், பகலில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் வெப்பத்தின் உஷ்ணம் குறையாமல் இருப்பது நகர்ப்புற மக்களை அதிக சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களை ஒப்பிடுகையில் நகரங்களில் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தூக்கமின்மை முதல் உடல்நல பாதிப்புகள் வரை பல பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நகரங்கள் வளர்ச்சியடையும் போது, மரங்கள், மண், குளங்கள், ஏரிகள் போன்ற இயற்கை நிலப்பரப்புகள் குறைந்து, அவற்றின் இடத்தை சாலைகள், கான்கிரீட் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து விடுகின்றன. இது நகரங்களின் காலநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

காடுகள், நீர்நிலைகள் போன்ற இயற்கை நிலப்பரப்புகளை விட, சாலைகளும் கட்டடங்களும் சூரிய வெப்பத்தை அதிகமாக உறிஞ்சிக்கொள்கின்றன. பின்னர், சூரியன் மறைந்த பிறகும் அவை சேமித்த வெப்பத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் நகரங்களில் இரவு நேரங்களிலும் வெப்பம் நீண்ட நேரம் நீடிக்கிறது.

மேலும் வாகனங்கள், தொழிற்சாலைகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகள் மூலம் வெளியேறும் வெப்பமும் நகர்ப்புற வெப்பநிலையை அதிகரிக்கிறது. மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த பாதிப்பு மேலும் தீவிரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, கட்டடங்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. அதே நேரத்தில், மரங்கள் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் சுற்றியுள்ள இடங்களில் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, மனித உடலின் இயற்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் உடலின் மைய வெப்பநிலை இயல்பாகக் குறையும். இதுவே சீரான தூக்கத்திற்கும் உடல் ஓய்விற்கும் உதவுகிறது.

ஆனால், இரவு நேரங்களிலும் அதிக வெப்பம் நிலவும்போது, உடல் தன்னை குளிர்விக்க அதிகமாகப் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தூக்கமின்மை, சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, நீண்ட நேர அதிக வெப்பம் இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அதிக ஆபத்தாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

இரவு நேர வெப்பம் அதிகரிப்பதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அது பசியின்மை, உடல் எடை குறைவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நகர்ப்புறங்களில் வெப்பத்தை குறைக்க அதிக மரங்களை வளர்ப்பதே எளிய மற்றும் பயனுள்ள தீர்வாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பூங்காக்களை விரிவுபடுத்துதல், சாலையோரங்களில் மரங்கள் நடுதல், ‘பசுமை கூரைகள்’ அமைத்தல் மற்றும் காற்றோட்டம் அதிகம் உள்ள வகையில் கட்டடங்களை வடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் இதற்கு உதவும் என கூறப்படுகிறது.