ஒருகாலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அரணாகக் கருதப்பட்ட கோவை மாவட்டம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட அரசியல் திருப்பத்தை பதிவு செய்துள்ளது. பல தசாப்தங்களாக அதிமுகவின் உறுதியான ஆதரவு மண்டலமாக விளங்கிய கோவை, இம்முறை அந்தக் கட்சிக்கே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
1972-ஆம் ஆண்டு அதிமுக உருவானதிலிருந்து, மேற்கு மண்டலம் குறிப்பாக கோவை மாவட்டம் அந்தக் கட்சிக்கு தொடர்ந்து அரசியல் பலம் சேர்த்த பகுதியாக இருந்து வந்தது. அதிமுகவின் கோட்டை என்ற அடையாளம் கோவைக்கு ஏற்பட்டதற்குக் காரணம், தேர்தல் தோறும் அக்கட்சிக்கு கிடைத்த தொடர்ச்சியான வெற்றிகள் தான்.
1977-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பேரூர் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1991-ஆம் ஆண்டு தேர்தலில் கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக தனது ஆதிக்கத்தை முழுமையாக நிரூபித்தது.
1996-ஆம் ஆண்டு அதிமுகவுக்கு எதிரான அலை வீசியபோது கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுகவிடம் இழந்திருந்தாலும், 2001-இல் நடைபெற்ற தோ்தலில் அனைத்து தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றியது.
அதன்பின் 2006 தேர்தலில் 8 தொகுதிகளிலும், 2011 தேர்தலில் மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வென்றது. 2016 தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியை மட்டும் திமுக கைப்பற்றிய நிலையில், மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல், 2021 தேர்தலிலும் திமுக மாநில அளவில் ஆட்சியை பிடித்திருந்தபோதும், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனது கோட்டையை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், 2026 தேர்தலில், கோவையை அதிமுகவிடமிருந்து கைப்பற்றும் நோக்கில், கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக திமுக நியமித்தது. மேற்கு மண்டலத்தின் 35 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாக கவனம் ஈர்க்கும் கோவை தெற்கு தொகுதியில் அவரையே போட்டியிட வைத்தது திமுக.
இந்தத் தோ்தலில் கோவையில் கொடி நாட்டப்போவது திமுகதான் என்று அக்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் கணித்த நிலையில், புதிதாக உருவான தவெக அதனை பொய்யாக்கி, அதிமுகவின் கையில் இருந்து 6 தொகுதிகளைக் கைப்பற்றி கோட்டையை தனதாக்கி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தமட்டிலும், இதற்கு முன்பு இங்கு திமுக எந்த தொகுதிகளையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதிமுக வசம் 10 தொகுதிகள் இருந்தன. முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட தவெக, கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
கோவை தெற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகளில் திமுகவும், பொள்ளாச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேகவும் வெற்றி பெற்றன. ஆனால் அதிமுக தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை அளித்துள்ளது.
