தமிழகத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு கல்வியும் தொழிலும் மிகபெரும் அளவில் பக்கபலமாக இருந்து வருகிறது. புதிதாக அமைய உள்ள தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் மேல் இந்த 2 துறை சார்ந்தவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
புதிதாக பொறுப்பேற்கும் தமிழ்நாடு அரசு மாநில அரசு பல்கலைகளில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை முறைப்படி நிரப்பவும், இந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் தரமாக இருக்க தேவையான நிதிகள் கிடைக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வித்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இளைஞர்கள் அதிகமானோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் அவர்களின் எதிர்காலத்துக்கு அவசியமான கல்வித்துறையை புது அரசு பலப்படுத்தவேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல தொழில்துறையை பொறுத்தவரை சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகுதியாக உள்ள கோவை போன்ற மாவட்டங்களில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளில் முக்கியமான ஒன்று, மின் கட்டணம் தொடர்பான நிலைக்கட்டணத்தை குறைப்பது தான். கோவை காம்ப்ரஸர் இண்டஸ்ட்ரீஸ் தொழில் சங்கம் போன்ற அமைப்புகள் இதுகுறித்து தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
