இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் கோடைக்காலம் ஆண்டுதோறும் மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான கணிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக இந்தியாவில் ஆண்டுதோறும் 15 முதல் 40 நாட்கள் வரை கூடுதலாக கடுமையான வெப்பம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை, கடுமையான வெயில் வீசினாலே மக்கள் பெரும் அவதிப்படும் நிலையில், ஆண்டுதோறும் கூடுதலாக 40 நாட்கள் வரை கோடை காலம் நீடிக்கும் என்ற கணிப்பு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அந்த அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் வெப்பம் மற்றும் மழை அளவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் கூடுதலாக நீடிக்கும்.

மேலும், ஆண்டுதோறும் இயல்பைக் காட்டிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் 15 முதல் 40 நாட்கள் இரவுகள்  வெப்பம் அதிகமாக இருக்கும். கனமழை பெய்யும் நாட்களும் ஆண்டுதோறும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக் கூடும்.

குறிப்பாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் பனிப்பொழிவு தாமதம், கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்குதல், மழைப்பொழிவு குறைவு மற்றும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தற்போது இரண்டு மாத கோடை காலத்தையே தாங்க முடியாத நிலையில், மேலும் ஒரு மாதம் வெப்பம் நீடிக்கும் என்ற தகவல் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.