கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்கவும் பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்யவும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது கண்காணிப்பு மற்றும் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஐஸ்கிரீம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மூலப்பொருட்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள், உணவுப் பாதுகாப்பு உரிமம் உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரிப்பதை முன்னிட்டு, தரமற்ற மற்றும் கலப்பட பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை மையங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக தரமற்ற மூலப்பொருட்கள், அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்கள் மற்றும் சுவையூட்டிகள், அசுத்தமான நீர், ஆபத்தான கலப்படப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அசுத்தமான நீர் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தும் உற்பத்தி நிலையங்கள் மீது உடனடி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பு நிலையங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீம் அல்லது குளிர்பானங்களில் கலப்படம், தரக்குறைவு அல்லது பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகித்தால், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இதற்காக மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1070 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் FSSAI உரிம எண் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற அல்லது பிராண்ட் அல்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
