கம்பீரம், பேச்சில் மரியாதை, தெளிவான சிந்தனை, அரசியல் முதிர்ச்சி, இளைஞர்களை ஈர்க்கும் துடிப்பு, சமரசம் இல்லாத தன்மை போன்ற பண்புகளுடன் தனக்கான அரசியல் இலக்கணத்தை வகுத்துக்கொண்டவர் அண்ணாமலை குப்புசாமி.
தமிழக பாஜகவின் அதிரடி முகமாக இருந்த அண்ணாமலை, பாஜகவே இல்லாத இடங்களில் கூட அக்கட்சியின் பெயரை ஒலிக்கச் செய்தவர். இவரது அரசியல் பாணி என்பது எப்போதும் ஆக்ரோஷமானதாகவும், சமரசம் செய்து கொள்ளாததாகவும் இருக்கும்.
தமிழக பாஜகவின் முகம்
இந்திய அளவில் வலுவான கட்சியாக பாஜக பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் இன்னும் முழுமையான வளர்ச்சியடையாத நிலையில் தான் இக்கட்சி உள்ளது. பாரதிய ஜனதாவும் 1980 முதல் வெவ்வேறு தலைவர்களை களமிறக்கி கட்சியை வலுவாக்க மிகவும் போராடி வருகிறது. அத்தகைய எதிர்பார்ப்பை அண்ணாமலை பூர்த்தி செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.
தமிழக பாஜக தலைவர்கள்
1980ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் பாஜக தலைவராக பதவி வகித்தவர் கே. நாராயண ராவ். இவர் 1984ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். 1984 முதல் 1989ம் ஆண்டு வரையிலும், 1996 முதல் 2000 வரையிலும் இருமுறை பாஜக மாநில தலைவராக கே. என். லட்சுமணன் பதவி வகித்துள்ளார்.
2004 முதல் 2007 வரை பாஜக மாநில தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இருந்தார். 1989ம் ஆண்டு பாஜகவில் இணைந்த டாக்டர் கிருபாநிதி, 2000ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக பதவி வகித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் பாஜக தலைவராக தேர்தெடுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பின் தமிழக பாஜக மாநில தலைவராக இல.கணேசன் பதவி வகித்தார். .
2009 முதல் 2014ம் ஆண்டு வரை பாஜக மாநில தலைவராக பதவி வகித்தவர் பொன். ராதாகிருஷ்ணன். 2014 முதல் 2019 வரை பாஜக மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்தார். 2020 முதல் 2021 வரை எல்.முருகன் தலைவராக இருந்தார்.
தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தகுந்த அளவில் தமிழகத்தில் அக்கட்சியை வளர்த்து இருந்தாலும், அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பாஜக எனும் தேசிய கட்சி இன்னும் வலுவாகியது எனக் கூறலாம்.
என் மண், என் மக்கள்
கர்நாடகா கேடரை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2020ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தமிழக பாஜகவில் இணைந்தார். அடுத்த ஓராண்டிற்கு உள்ளாகவே, அதாவது 2021ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அக்கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது கட்சிக்குள் மட்டுமின்றி, கட்சிக்கு வெளியிலும் பலரது புருவங்களை உயர்த்தியது என்றாலும், தமிழக பாஜகவிற்காக கடுமையாக உழைத்தார். 2021 முதல் 2025 ஏப்ரல் 11ம் தேதி வரை இவர் தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைபயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் நோக்கம் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான்.
இந்த நடைபயணம் பிப்ரவரி 2024 பல்லடத்தில் நிறைவடைந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். இந்த பாத யாத்திரை அப்போது பெரியளவில் பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. இந்தப் பயணத்தில் பல்வேறு தொகுதிகளில் உள்ள மக்களை அவர் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். குறிப்பாக அண்ணாமலையை பிடிக்கும் என்பதற்காகவே பலரும் அவருடன் நடை பயணத்தில் பங்கேற்றனர்.
தவிர்க்க இயலாத சக்தி
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஒரு கூற்று காலம் காலமாக ஒலித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் பாஜகவை கொண்டு சேர்த்ததில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு பெரும்பங்கு உண்டு என்பதை உறுதியாகக் கூறலாம்.
தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக அண்ணாமலை உருவெடுத்துள்ளார். குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் முதன்முறையாக பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது. சில இடங்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
குறிப்பாக, பாஜக பெற்ற வாக்குகளின் சதவீதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டது. தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு 11.24 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதாக அக்கட்சியினர் கூறினர். இந்த வளர்ச்சிக்கு அண்ணாமலையும் முக்கியக் காரணம்.
வெற்றிகரமான தோல்வி
2024 நாடாளுமன்ற தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில், 4,50,132 வாக்குகள் பெற்று வெற்றிகரமான தோல்வியை தழுவினார். அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளும் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள்.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்தின் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார். இதில் அதிமுக வேட்பாளரை காட்டிலும் அதிக வாக்குகளை அண்ணாமலை பெற்றது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதிரடி அரசியல்
திமுக, அதிமுக என இருதரப்பு ஊழல்களையும் பல சந்தர்ப்பங்களில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் எந்த பயமும் இல்லாமல் உண்மையை உரக்கப் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
குறிப்பாக தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் சுமார் 20 தொகுதிகள் அக்கட்சிக்கு துளியும் வெற்றி வாய்ப்பு இல்லாதவை என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது.
பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்ற அனுபவம் வாய்ந்தவர்கள், பாஜகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடமிருந்து போராடி பெற தவறியது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், இதுவே அண்ணாமலை இருந்திருந்தால், துணிச்சலாக பேசி, பாஜகவிற்கு சாதகமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை முன்வைத்து வாதிட்டிருப்பதோடு, அதிமுகவை விட அதிக வாக்கு சதவீதம் வாங்கிய இடங்களை குறிப்பிட்டு, அவற்றை வாங்கியிருப்பார் என்ற பேச்சும் அவரது ஆதரவாளர்களிடம் வெளிப்படுகிறது. ஆனால், அவர் இல்லாத இடைவெளியை எடப்பாடியார் பயன்படுத்தி, தனக்கு சவாலான தொகுதிகளை பாஜகவின் தலையில் கட்டிவிட்டதாகவும் கருதப்படுகிறது.
தமிழக பாஜகவின் வேகம் குறைந்துள்ளதா?
குறிப்பாக அண்ணாமலை தற்போது மாநில தலைவராகவோ அல்லது சட்டமன்ற தேர்தல் களத்தில் போட்டியிட்டு இருந்திருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக உள்ளது. அண்ணாமலை போன்ற ஒரு ஆளுமை போட்டியிடாதது கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் இது தமிழக பாஜகவின் வேகத்தையும் குறைத்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் அரசியல் அனுபவத்தில் முதிர்ச்சி பெற்றவர் என்றாலும், அண்ணாமலை போன்ற வேகம் அவரிடம் விடுபடுவதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
மீண்டும் தலைவராவாரா?
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலையிடம் கேட்டதற்கு, தான் இப்போது பாஜகவில் ஒரு தொண்டன். இதுதொடர்பாக இப்போது என்னால் கருத்து கூற முடியாது எனக் கூறியதோடு, மீண்டும் தமிழக பாஜக தலைவராவதற்கு வாய்ப்பு அமையலாம் அல்லது அமையாமலும் போகலாம், அப்போது இதற்கு பதில் அளிக்கிறேன் எனக் கூறியிருந்தார். இதன் மூலம் மீண்டும் அண்ணாமலை தலைவராக பொறுப்பில் அமருவதற்கு வாய்ப்பு உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவிய பின்னர், அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பதவியில் அமர்த்தப்பட்டார். அதேபோல சட்டமன்ற தேர்தலில் பாஜக பெறும் வெற்றி, தோல்வியைப் பொறுத்து மீண்டும் தலைமை மாற்றப்படுவதற்கான சூழல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
