வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனின் 60வது பிறந்தநாளையொட்டி, அரசு பள்ளிகளுக்கு தேவையான இருக்கை, நாற்காலிகள் மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.33.50 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் 60-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், சங்கர் விசுவநாதனின் மனைவி ரமணி பாலசுந்தரம் மற்றும்  உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், கணவர் டாக்டர் ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திருவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியூர்வெளி மற்றும் புலிமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 50 இருக்கை மற்றும் நாற்காலிகள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைகளில் இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 5 பேரின் சிகிச்சைக்கு ரூ.13.50 லட்சம் மருத்துவ உதவிகளை துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் வழங்கினார்.