தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தங்களது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க கோவைக்கு நாளை (18.4.26) பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். கோவை கொடிசியாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
இதே நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மேட்டுப்பாளையத்தில் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் செய்யவுள்ளார். இதன் காரணமாக 18ம் தேதி மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள்:
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது.
அதற்குப் பதிலாக, நீலாம்பூரிலிருந்து மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்கநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பஸ்கள் லட்சுமி மில் சந்திப்பில் யு டர்ன் செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்கநல்லூர் வழியாக பைபாஸ் ரோடு வழியாகச் செல்லலாம்.
இலகுரக வாகனங்கள்:
நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நான்கு ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம். நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாகச் செல்லும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் யு டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்கநல்லூர் ரோடு வழியாகச் செல்லலாம்.
விமான நிலையப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்:
18.4.26 மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் விமான நிலைய நுழைவாயில் வரை வர தடை செய்யப்படுகிறது. எனவே, விமான நிலையத்திற்கு வருபவர்கள் மாலை 4 மணிக்கு முன்பாக வரவேண்டும். அதற்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்லலாம்.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
18ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கால் டாக்ஸிகள் மற்றும் இதர வாகனங்கள் விமான நிலையத்திற்குள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை.
இவ்வாறு கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
