மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நாமக்கல்லில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி போராட்டத்தை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த போராட்டங்கள் நடைபெறத் துவங்கி உள்ளன. கோவையிலும் பல இடங்களில் இப்போராட்டமானது நடைபெறுகிறது.
கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் தனது இல்லத்தில் கருப்பு கொடி ஏந்தி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட காணொளியில், தொகுதி மறுசீரமைப்பு சட்டதிருத்தம் என்பது தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் ஒரு காரியம் எனவும், தற்போது தமிழகத்தில் உள்ள 39 மக்களவை சீட்டுகள் இந்த நடவடிக்கையால் சொற்பமாக குறைய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
ஏற்கனவே தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தால் நமது மாநிலத்தின் தேவைக்கான திட்டங்களை கேட்கும் உரிமை இல்லாமல் போகக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் கூறி, இதை தமிழகம் ஒன்றாக எதிர்க்கும், ஒன்றாக வெல்லும் என முழங்கினார்.
