கோவையில் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா காந்திபுரத்தில் உள்ள ஆர் வி ஹோட்டல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை, துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த்துறைத் தலைவர்  விஸ்வநாதன் எழுதிய பன்முக ஆய்வு கட்டுரைகள் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முருகேசன்  வரவேற்றார். முதல் பிரதியை கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

முதல் பிரதியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர், சிவகுமார் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வெற்றியின் ஓசை, வெற்றி முழக்கம், துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் பன்முக ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் அறிமுக உரையை முறையே சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின், தமிழாசிரியர் கருணாநிதி, கவிஞர் மீ. உமா மகேஸ்வரி, பொள்ளாச்சி இலக்கிய வட்டம் செயலாளர் கவிஞர் இரா. பூபாலன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்  விஸ்வநாதன் ஆகியோர் வாசித்தனர்.

இதுவரை சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்கள் 90க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனரும், புத்தகம் ஆசிரியருமான சிந்தனை கவிஞர் கவிதாசன் ஏற்புரை வழங்கினார்.