ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 39வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர், ஜி.எஸ்.டி. நுண்ணறிவு துணை இயக்குநர் பிரபாகரன், கலந்து கொண்டு “எஸ்.ஆர்.சி.ஏ.எஸ். 360” என்ற கல்லூரி மலரை வெளியிட்டு பேசுகையில்: இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் கணினி அறிமுகமானபோது ஏற்பட்ட பயம் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தோன்றுகிறது.
ஏ.ஐ. எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் மனித வளம் மிகவும் இன்றியமையாதது. ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளின் அபரிவிதமான வளர்ச்சிக்கு மனித வளமே மிகவும் முக்கிய காரணம்.
உலகளவில் இந்திய நாடு பொருளாதாரத்தில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் மனித வளம் தான். மாணவர்கள் கல்வி பயிலும்போதே வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தெளிவான நோக்கம் இருந்தால் பெரிய உயரங்களை நம்மால் தொட முடியும்.
ஏ.ஐ, ஜெமினி தொழில்நுட்பங்கள் போன்று வைப் கோடிங் என்ற தொழில்நுட்பத்தையும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்திய அரசுப் பணிகளுக்கு முயற்சிக்கும் மாணவர்கள் தங்கள் தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் அறிவை இந்த சமூகத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. மாணவர்கள் உடல் நலன் மற்றும் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்த சமூகத்திற்கு பயன்படும்போது இந்த சமூகம் நம்மை உயர்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, எல்ஸ்வியர் & ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம் 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ள உலகளவிலான விஞ்ஞானிகள் பட்டியலில் முதல் தரம் வாய்ந்த 2% விஞ்ஞானிகளுள் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பாலகுமார் சிறப்பிடம் பெற்றுள்ளார். அவரைப் பாராட்டி சிறப்புப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீனியர் கிரிக்கெட் அணியில் சிறந்து விளங்குவதோடு, ரஞ்சி கோப்பை, விஜய் அசாரே கோப்பை, ஸ்டேட் “ஏ” கோப்பை, கர்னல் சிகே நாயுடு கோப்பை போன்றவற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, டிஎன்பிஎல் போட்டிகளில் லைக்கா கோவை கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள கல்லூரியின் முதுநிலை முதலாமாண்டு பன்னாட்டு வணிகவியல் துறை மாணவர் கோவிந்தைப் பாராட்டி, சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
மேலும், இளநிலை சி.எஸ்.டி.ஏ. துறை மாணவர் பிரவின், முதுநிலை இரண்டாமாண்டு மேலாண்மைத்துறை மாணவர் கோபி கிருஷ்ணா ஆகியோர் சிறந்த மாணவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, துறை வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 64 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
