பொள்ளாச்சி தாலூக்கா, மண்ணூர் கிராமத்தில் நடைபெறும் அரசு புறம்போக்கு கல்குவாரிகள் ஏலம் தொடர்பான பணியில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, அதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் கொடுத்த புகார் மனுவில், அரசு புறம்போக்கு கல்குவாரிகள் ஏலம் விடுதல் தொடர்பாக, அரசிதழில் வெளியிடப்பட்டு, கடந்த 28.02.2026-ம் தேதியன்று மாலை 6.00 மணி வரை விண்ணப்பம் பெற்று, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி தாலூக்கா, மண்ணூர் கிராமத்தில்  இரண்டு இடங்களுக்கு ஏலம் பெற விண்ணப்பிக்கும் போது, கனிமவளத்துறை உயரதிகாரிகள் மேற்கண்ட இரண்டு இடங்களில்  யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கூறவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் அதிகாரிகள் யாரையும் விண்ணப்பிக்க விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டிய அவர், இந்த இரண்டு  கல்குவாரியின் ஏலத்தை உடனடியாக நிறுத்தி வைத்து, மீண்டும் முறையாக ஏலம் அறிவித்து, நியாயமான முறையில் அனைவரும் ஏலத்தில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரை கேட்டுக்கொண்டார்.