சாதாரண வெள்ளை வேட்டி-சட்டை, தோளில் ஒரு துண்டு, அவ்வப்போது ஒரு மூக்குக்கண்ணாடி, எப்போதும் மக்களுக்காக போராடும் குணம். இவை மட்டுமல்ல தோழர் நல்லகண்ணு எனும் ஆளுமையின் அடையாளம்.
அவரை ‘கம்யூனிஸ்ட்’ எனும் ஒரு வார்த்தைக்குள் அடக்கமுடியாது. தேசப்பற்றாளர், போராளி, எழுத்தாளர், அரசியல் தலைவர், சமத்துவவாதி, இயற்கை ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட நல்ல மனிதர்.
மக்கள் இழக்கும் உரிமைகளை போராடினால் நிச்சயம் பெறமுடியும் என்ற நம்பிக்கையை தமிழகத்திற்கு பலமுறை கொடுத்த மூத்த அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு.
எளிமையை விரும்பும் மனிதராக காட்டிக்கொள்ளும் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் நிறைந்த உலகில், எளிய மக்கள் வாழும் வாழ்க்கையை அவர்களுடனே இணைந்து வாழ்ந்தவர் இவர்.
இதற்கு உதாரணம், அவர் வாழ்ந்த வீடு.
மாளிகைகள், பங்களாக்கள், வில்லா போன்ற வார்த்தைகள் அவரின் முகவரியில் இருக்காது. அவர் தங்கியது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தான்…
அவரிடம் பென்ஸ், பி.எம். டபிள்யு., ஆடி கார் இருக்காது. அவர் பயணம் செய்வது பல்லவன் பஸ்சில் தான்…
அவரிடம் தங்க, வைர நகைகள் இருக்காது. அவரின் மகள் ஆண்டாளின் காதுகுத்து விழாவில்கூட, கவரிங் கம்மல் தான் வாங்கிக்கொடுத்தார்.
விளம்பரத்துக்காகவோ, பெருமைக்காகவோ அல்ல, அவர் சமுதாயத்திற்கும், குரலற்றவர்களின் குரலாகவும் உழைக்க தவறாதவர். தனக்காக மட்டும் உழைக்க மறந்தவர்.
ஆங்கிலேயர்களின் கீழ் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் 26.12.1925ம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் நல்லகண்ணு.
சிறு வயதிலேயே இந்தியாவின் மீது தேசப்பற்று கொண்டவராக வளர்ந்தார். தான் படித்த பள்ளியில் உலக போருக்கு பிரிட்டன் நாட்டுக்கு ஆதரவாக நாடகங்கள் அரங்கேறியபோது, அதை நிறுத்த சொல்லி பள்ளி மாணவர்களுடன் போராடினார். அதன் பின் விளைவுகளையும் சந்தித்தார்.
இதே போல, கல்லூரி பயிலும் போதும் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றார். இதற்கான சவால்களை எதிர்கொண்டார். பிரிட்டிஷ் காவல் துறையை கண்டு அஞ்சாதவராக சிறு வயதிலேயே இருந்தவர் நல்லகண்ணு.
பண்டிதர் நேருவின் சோசியலிச, கம்யூனிச கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் கேட்பார். தன்னுடைய 16வயதிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழையவேண்டும் என விரும்பி முயற்சித்த அவருக்கு 18 வயதில் கம்யூனிஸ கதவுகள் திறந்தன. 1943-ல் அவரின் மக்கள் பணி கம்யூனிச இயக்கத்துடன் ஆரம்பமானது.
திருநெல்வேலியில், நிலமில்லாத விவசாய கூலி தொழிலாளிகளின் போராட்டங்களை அவர் நடத்தினார். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த காலகட்டத்தில் (1948) இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு பெரும் நெருக்கடி சூழல் நிலவியது. அதையெல்லாம் தாண்டி கட்சியை வளர்க்க உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக நல்லகண்ணு இருந்தார்.
இதுபோன்ற போராட்டங்களை நடத்தியதற்காக காவல்துறையினர் கம்யூனிச இயக்க போராளிகளை தேடிவந்த போது, நல்லகண்ணு காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டார். பிற கம்யூனிச இயக்க போராளிகள், தலைவர்கள் எங்கே என அவர்கள் கடுமையாக தாக்கி கேட்டபோதும் வாய்திறக்காதவர் அவர்.
பூட்ஸ் காலால் நல்லகண்ணு-வின் கால்களை போலீசார் மிதித்த போதும், அவரின் மீசையை சிகரெட் நெருப்பை கொண்டு பொசுக்கி, சதையை சுட்டபோதும் பிற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எங்கே என தெரியாது என மட்டுமே கூறியிருக்கிறார் நல்லகண்ணு. (இதன் பின்னர் மீசை வைப்பதை அவர் கைவிட்டார்).
அவர்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்காக ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்த போதும், போராளியின் வாழ்க்கையில் இதுவும் ஒரு அங்கமே என அதை ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக 1956 வரை அவர் சிறையில் இருந்தார்.
சிறையை விட்டு வெளியே வந்த அவருக்கு 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெற்றது. சாதி ஒழிப்பு போராளியான அண்ணாசாமி என்பவர் தனது மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவிற்கு திருமணம் செய்து வைத்தார். போராளியை மணந்த பெருமையுடன், குடும்பத் தேவைகளை ரஞ்சிதம் பார்த்துக்கொண்டார். பொதுமக்கள் பிரச்சனைகளை முன்னின்று நல்லகண்ணு பார்த்துக்கொண்டார்.
மக்களை திரட்டி எத்தனையோ போராட்டங்களை நடத்தி, அதன்மூலம் இழந்த உரிமைகளை மீட்டுக்கொடுத்தவர் நல்லகண்ணு. சிறைச்சாலையில் இருந்தபோது கூட அங்கே நடைபெற்ற அநீதிகளை நிறுத்த அவர் போராடினார். அதன் விளைவாக சிறைவாசிகள் கல்வி கற்கும் வாய்ப்பு முதல் பல உரிமைகள் அவர்களுக்கு கிடைத்தன.
தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க, நல்லகண்ணு 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தானே ஆஜராகி வாதாடி, ஆற்றில் மணல் அள்ள 5 ஆண்டுகளுக்குத் தடை உத்தரவை பெற்றார்.
1990களில் தென் மாவட்டங்களில் சாதிய கலவரங்கள் அதிகரித்திருந்த காலத்தில் அவருடைய மாமனார் அண்ணாசாமி, அப்படி ஒரு சம்பவத்தில் உயிரிழந்தார். இந்த மரணத்தை காரணமாக வைத்து மற்றொரு சாதிய கலவரம் ஏற்படக்கூடாது என உறுதியாக இருந்த அவர், அங்கு வன்முறை ஏற்படுவதை தடுத்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நல்லகண்ணு பல முறை போராடியிருக்கிறார்.
பேருந்துகளிலே பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் நல்லகண்ணு. ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் சரி, கட்சிக் கூட்டத்திற்கு சென்றாலும் சரி பேருந்துகளையே அதிகமாக பயன்படுத்தியவர் அவர்.
இதைக்கண்ட தமிழ் சான்றோர் பேரவை, தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவனத் தலைவரும், நந்தன் இதழ் ஆசிரியருமான அருணாச்சலம், அவருக்கு ஒரு காரை பரிசாக வழங்க முடிவு செய்தார். கார் மட்டுமல்ல இந்த காருக்கு எரிபொருள், ஓட்டுநர் மற்றும் ஓட்டுவதற்கான சம்பளத்தையும் தானே கொடுப்பதாக கூறி, இனிமேல் காரில் பயணம் செய்யுங்கள் என்று அவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதன் மேல் நாட்டம் இல்லாதவர் நல்லகண்ணு.
ஒரு முக்கிய நிகழ்வில், கலைஞர் கருணாநிதி கேட்டுக்கொண்ட போதும் கூட, அந்த காரை தனக்கு தர வேண்டாம், கட்சிக்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்லி கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த காரை கொடுத்தார்.
நமது நாட்டில் அடிப்படை மக்களுக்கு பக்க பலமாக கம்யூனிசம் இருக்க வேண்டும் என்று நம்பி, தனது கம்யூனிச பயணத்தை 60 ஆண்டுகளுக்கு மேல் நிகழ்த்தி வந்த அவருக்கு மறக்கமுடியாத பரிசை கொடுக்க விரும்பிய தோழர்கள், அவருடைய 80வது பிறந்த நாளில் பலரின் ஆதரவுடன் ரூ.1 கோடியை திரட்டி பரிசளித்தனர்.
இதை கொண்டு இனியாவது அவர் வாழ்க்கையில் தேவைப்படும் வசதிகளை செய்து கொள்வார் என நினைத்தபோது, அந்த ரூ. 1 கோடியை கட்சியின் வளர்ச்சிக்காக நன்கொடையாக நல்லகண்ணு கொடுத்துவிட்டார்.
இப்படி ஒரு நிகழ்வு தமிழக அரசியல் தளத்தில் இதற்கு முன் நடைபெற்றது இல்லை.. இனி தமிழக அரசியலில் நடக்குமா என்பதும் ஆச்சரியமே.
தமிழக அரசு 2022ல் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியது. அந்த விருதுடன் அவருக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன் தன்னுடைய ரூ.5,000யை சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தனிமனித வாழ்க்கையிலும், பின்பற்றும் கம்யூனிச அரசியல் கொள்கைகளிலும், பல்வேறு போராட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் அரசியலில் மூன்று முறை தோல்வியை தழுவினார்.
நெல்லையில் உள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1967ல் காங்கிரஸ் வேட்பாளர் கோமதி சங்கர தீக்ஷிதரிடமும், 1977ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தியிடமும் தோல்வி அடைந்தார்.
1999 பாராளுமன்றத் தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜகவின் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப் போனார். இந்த மூன்று தொகுதிகளில் அவர் தோல்வியை தழுவினார் என்பது உண்மை.
நல்லகண்ணு போன்ற நல்ல மனிதர்கள் நமக்கு நிறைய வாழ்க்கை பாடங்களையும், பலருக்கு அரசியல் பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.
என்னதான் போட்டி அரசியலில் அவர் தோற்றுப் போனாலும், இறுதி மூச்சு இருக்கும் வரை ஒரு போராளியாக அவர் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தார்.
பற்றிய கொள்கையை விடாது, மக்களுக்காக உழைக்கும் தொண்டனாக அவர் 80 ஆண்டுகளைக் கடந்து பொது வாழ்க்கையில் அயராது உழைத்தார். அதனால் அவர் வென்றது தமிழ்நாட்டை என்பது உண்மை மட்டுமல்ல, இதுவே சரித்திரம்.
என்றும் தமிழ் மக்களின் நினைவில் தோழர் ஆர்.என்.கே (1925-2026).
