2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீது பல கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் இது ஏமாற்றம் கொடுக்கும் ஒன்றாக உள்ளதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஜெயபால் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில், மகளிர் உரிமைத் திட்டம் – ரூ. 14,412 கோடி, புதுமை பெண் திட்டம் – ரூ. 512 கோடி, தமிழ்புதல்வன் திட்டம் – ரூ. 492 கோடி, மடிக்கணினி திட்டம் – ரூ. 2,000 கோடி, காலை சிற்றுண்டி திட்டம் – ரூ. 506 கோடி, சத்துணவு திட்டம் – ரூ. 2,834 கோடி, பொது விநியோகத் திட்டங்கள் – ரூ. 14,000 கோடி, பிப்ரவரி 13ஆம் தேதி 1.31 கோடி மகளிர்களுக்கு – ரூ. 6,550 கோடி, விடியல் பயணம் திட்டம் – ரூ. 10,108 கோடி என பல்வேறு மானியங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன. தமிழகத்தின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சில மாநிலங்கள் அவற்றை பின்பற்றவும் தொடங்கியுள்ளன.
ஆனால், மாநிலத்தின் அதிக வேலைவாய்ப்பையும் அதிக வரி வருவாயையும் வழங்கும் தொழில்முனைவோரின் முக்கிய கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, மின்கட்டணத்துடன் உயர்த்தப்பட்டுள்ள துணைக்கட்டணங்களை 50% குறைக்கவும், வருடாவருடம் உயர்த்தி வரும் மின்கட்டண உயர்வுகளை ரத்து செய்யவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அரசு மின்வாரியத்துக்கு ரூ. 2,600 கோடி நிதி ஒதுக்கினால், போட்டியிடும் பத்து மாநிலங்களுடன் தமிழக தொழில்துறையினர் சமநிலையுடன் போட்டியிட முடியும் என பலமுறை வலியுறுத்தியும், இப்போதைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
