இன்றைய உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்வதே கடினம். பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும், டீனேஜர்களும் கூட தனியாக போன் வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய தேவை மற்றும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக பெற்றோர், போன் கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால், 12 வயதிற்கு முன் இவ்வாறு ஸ்மார்ட்போன் வழங்குவது, மனநலம், உடல் எடை மற்றும் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என குழந்தைகள் மற்றும் இளம் வயது மனநல மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வின் படி, 12 வயதில் ஸ்மார்ட்போன் பெற்ற குழந்தைகளில் சுமார் 30% பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகள் அதிகமாக இருந்தன; 40% பேருக்கு உடல் பருமன் அதிகரித்தது; 60% பேருக்கு தூக்கச் சிக்கல்கள் காணப்பட்டன.
இந்த பிரச்சினைகளுக்கு நேரடி காரணம் ஸ்மார்ட்போன்தான் என்று ஆய்வு உறுதி செய்யவில்லை. ஆனால், 12 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது மற்றும் இந்த சிக்கல்கள் இடையே தெளிவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
12 வயது என்பது குழந்தைகள் இளமைப் பருவத்திற்குள் நுழையும் காலம். இந்த வயதில் மூளை வேகமாக வளர்ச்சி அடைகிறது; ஹார்மோன் மாற்றங்கள் அதிகரிக்கின்றன; உணர்ச்சி நிலைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
இந்த வயதில் சமூக ஊடகங்களில் வரும் லைக், கமெண்ட் போன்றவை குழந்தைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் பழக்கம் மனஅழுத்தத்தை உருவாக்கும்.
மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதுடன், அதிக ஸ்னாக்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கின்றன.
படுக்கைக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தூக்கத்தை பெரிதும் பாதிக்கிறது. திரையிலிருந்து வரும் நீல ஒளி, மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனின் உற்பத்தியை குறைப்பதால் தூக்கமின்மை, மனநலம் பாதிப்பு, உடல் எடை கூடும் அபாயம் அதிகரிக்கும்.
