கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையை ஏற வரும் பக்தர்கள் மேலே கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அங்கேயே விட்டு வருவது, அத்துடன் மலையில் உள்ள கடைகளில் தின்படங்கள் வாங்கி உண்ட பின்னர் அதன் பிளாஸ்டிக் கவர்களை அங்கேயே விட்டுவிட்டு வருவது இவையெல்லாம் மலையின் தூய்மையை பாதிக்கும் செயலாக உள்ளது.

பிளாஸ்டிக் குப்பைகள் மலையிலேயே சேர்ந்துவிட்டால் அது மலையின் பசுமை தன்மைக்கும், பல உயிரினங்களின் நலனுக்கும் பெரும் ஆபத்தாக அமையும். எனவே இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் இருக்க வனத்துறை தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

2025ல் வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு பின்னர் தூய்மை பணியின் போது எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 10,905 கிலோ என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கி 1 வாரம் கடந்துள்ளது.

இந்த நிலையில், உணவு பொருட்களை மலைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் வாங்க வருவோருக்கு விற்பனை செய்கையில், பிளாஸ்டிக் கவர்களை அகற்றி, பேப்பர் பைகளில் போட்டு வழங்க, ஊக்குவிக்கும் நோக்கில் உற்சாகமாக செயல்படுகிறது வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு.

velliyangiri 2 scaled

இது பற்றி, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் சிவா ( ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல் உரிமையாளர்) அவர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது :-

இந்த புனிதமான மலையை தூய்மையாக வைக்கும் நோக்குடன் செயல்படும் நமது அமைப்பில் 300+ பேர் உள்ளனர். சென்ற ஆண்டு மட்டும் நாங்கள் 10 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.

இந்த வருடம் மலையில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர் பிளாஸ்டிக் பைகளில் விற்பதை தவிர்க்க, அவர்கள் உணவை வாங்கிக்கொண்டு கீழே இருந்து செல்லும் போதே அட்டைப்பெட்டிகள், காற்று புகா ஜாடிகளில் எடுத்து செல்ல 600 ஜாடிகள் வாங்கிக்கொடுத்துள்ளோம்.

மேலும், அவற்றை அங்கிருந்து மலையேறவரும் பக்தர்கள் வாங்கி செல்லும் போது காகித பைகளில் எடுத்து செல்ல 50,000 காகித பைகளை வழங்கியுள்ளோம். அது குறைய குறைய வாங்கிக்கொடுக்க தயாராக உள்ளோம்.

இந்த ஆண்டு பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் மலையில் சேராத படி பார்த்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.