ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள ஓடத்துறை என்ற ஊரில் 1949 ஆம் ஆண்டு இரண்டு வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்டுக் கடந்த 76 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி.

இப்பள்ளியில் 1957 ஆம் ஆண்டு முதல் 1965 வரை படித்து, அதன்பின் மருத்துவத்தில் பட்டம் பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டிலும், தற்போது கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை தலைமை நிபுணராக மருத்துவர் பரமசிவன் பணியாற்றி வருகிறார்.

அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்கத் தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்குத் துணை செய்ய வேண்டும் என்று நினைத்த இவர், புதிய கட்டடம் கட்டுவதற்காகத் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தன் குடும்பத்தின் சார்பில் 51 சதவீதம் பங்களிப்புத் தொகையாக 1,27,50,000 ரூபாய் வழங்கினார்.

அத்துடன் அரசின் பங்களிப்புத் தொகை ரூ.1,22,50,000 சேர்த்து மொத்தம் ரூ.2,50,0000 மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையேற்றுக் கல்வெட்டைத் திறந்து வைத்து பேருரையாற்றினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி வரவேற்புரை வழங்கினார்.

கட்டடம் கட்ட நன்கொடை வழங்கிய பள்ளியின் முன்னாள் மாணவரும், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை தலைமை நிபுணருமான மருத்துவர் பரமசிவன் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அவரின் துணைவியாரும், கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினருமான வாசுகி விளக்கேற்றிச் சிறப்பித்தார்.

நன்கொடை வழங்கிய மருத்துவர் பரமசிவன் அவர்களுக்குப் பள்ளியின் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பிலும் வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டது.

விழாவில் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற செயலர் மற்றும் ஆணையர் இராமசாமி, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி, நன்கொடையாளர் மருத்துவர் பரமசிவனின் மகள் ஆதிஸ்ரீ வஞ்சி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் பள்ளியின் தலைமையாசிரியர் குணசுந்தரி நன்றியுரையாற்றினார்.