வீடு என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவும், அதே நேரத்தில் மிகப்பெரிய நிதி பொறுப்பும் ஆகும். நமது சமூகத்தில் சொந்த வீடு வாங்குவது என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால் உணர்வுகளுக்காக ரிஸ்க் எடுத்து வீடு வாங்கலாமா அல்லது நிதியை கணக்கில் கொண்டு நிதானமாக ஒரு வீடு வாங்கலாமா என்பது குறித்து அடிசியா நிர்வாக இயக்குநர் மணிகண்டன் விளக்குகிறார்.

அவர் கூறியதாவது:  வீடு என்பது அனைவருக்கும் பெரிய உணர்ச்சிபூர்வமான விஷயம் மற்றும் பெரிய முடிவு. கல்யாணம் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, வீடு கட்டுவதும் அது மாதிரியானது தான். வீடு என்பது பலருக்கும் கனவாக இருக்கும்.

ஆனால் பொருளாதார நிலை தெரிந்து, கையில் குறிப்பிட்ட பட்ஜெட் வைத்து, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ தொகை எவ்வளவு செலுத்த முடியுமோ அதற்கான பட்ஜெட்டில் வீடு வாங்குவது நல்லது. வீடு வாங்கும் கமிட்மென்ட்டிற்கு செல்லும்முன் அடுத்த பத்து ஆண்டுகளை யோசித்து முடிவெடுக்கவேண்டும். உங்களுக்கான பட்ஜெட்டில் வாங்கவேண்டும்.

இ.எம்.ஐ என்பது ஒரு நாளில் முடியும் விஷயம் அல்ல. அதனால், வீடு வாங்கும் முன் அதற்கான இ.எம்.ஐ தொகையை அடுத்த பத்து ஆண்டு வரை நம்மால் எந்த சிக்கலும் இல்லாமல் கட்ட முடியுமா என்பதை யோசிக்கவேண்டும்.

வீடு வாங்க நினைக்கும் இளம் தம்பதிகள் தங்களின் மாத வருமானத்தைத் தெளிவாக மதிப்பிட வேண்டும். அந்த வருமானத்தில் 50 சதவீதத்தை இ.எம்.ஐ செலுத்தமுடியுமா என்பதை கணக்கிட வேண்டும். அப்படி உங்களால் கட்ட முடிந்தால் வீடு வாங்கலாம்.

ஆனால் வாங்கும் சம்பளம் முழுவதையும் இ.எம்.ஐ கட்டவே செலவிட்டால், பின் குடும்பம், வாழ்க்கையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படும். இன்றைக்கு இ.எம்.ஐ கட்ட முடியாமல் பல வீடுகளை ஏலத்துக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் பட்ஜெட்டிற்கு மீறிய வீடு வாங்குவதே. எனவே, இ.எம்.ஐ தொகை எவ்வளவு கட்ட முடியுமோ, அதற்கான பட்ஜெட்டில் வீடு வாங்குங்கள் எனக் கூறினார்.