ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைத்து, பயணிகள் சிரமமின்றி பயணிக்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா’ என்ற திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பிரத்யேக நுழைவாயில் அமைக்கப்படும்.
இந்த திட்டம், இந்தியாவில் முதல்முறையாக டெல்லி ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5,281 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் 120 இருக்கைகள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 22 டிக்கெட் கவுன்டர்கள், 18 மின்விசிறிகள், 17 சிசிடிவி கேமராக்கள், 5 லக்கேஜ் ஸ்கேனர்கள், ஆர்.ஓ. குடிநீர், வைபை மற்றும் கழிப்பறை வசதிகள் இடம்பெற்றுள்ளன.
திட்டத்தின் முக்கிய அம்சமாக, முன்பதிவு செய்த பயணிகளுக்கே பிரத்யேக நுழைவாயில் வழங்கப்படுகிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்ல முடியும். முன்பதிவு செய்யாத பயணிகள் அல்லது வியாபாரிகள் நேரடியாக ரயில் நிலையத்துக்குள் நுழைய முடியாது.
மேலும், கடை வைத்திருப்போர், ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் ஆகியோருக்கென தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதன்மூலம் அனுமதி பெற்றவர்களே பிளாட்பாரத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மத்திய அரசு, இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் 76 முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் சென்னை எழும்பூர், திருப்பதி, பாட்னா, மும்பை, புவனேஸ்வர், குவஹாத்தி, ஹவுரா, கோரக்பூர் போன்ற நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.
