டீயுடன் சேர்த்து சிகரெட் புகைப்பது, புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட எட்டு வகையான தீவிர உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அலுவலக வேலைகளுக்கு இடையே சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவேளையில், டீக்கடையில் ஒரு கப் டீயுடன் சிகரெட் புகைப்பது பெரும்பாலான ஆண்களின் பிரிக்க முடியாத வழக்கமான பழக்கமாக உள்ளது. ஆனால், இது வாழ்நாளை குறைக்க வழிவகுக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சூடான டீயும், நச்சுப் பொருட்கள் நிறைந்த சிகரெட்டும் ஒன்றாக உடலில் சேரும்போது, அது உணவுக்குழாய் உள்ளிட்ட உள் திசுக்களில் தீவிர சேதங்களை ஏற்படுத்தும் என்று அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, டீ மற்றும் சிகரெட் காம்போ உணவுக்குழாய், நுரையீரல், தொண்டை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆபத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது. காலப்போக்கில், நாள்பட்ட வீக்கத்தை உணவுக்குழாயில் ஏற்படுத்துவதோடு, நுரையீரலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெப்பமும் புகையும் குரல்வளையை சேதப்படுத்தும். சூடான டீயின் வெப்பம் மற்றும் சிகரெட் புகையில் உள்ள பார்மால்டிஹைடு, பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் தொண்டையின் நுண்ணிய திசுக்களை பாதிக்கின்றன. இது தொண்டை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் தேநீரில் உள்ள காஃபின் அதிகமாக உட்கொள்ளும்போது இதயத்தை அதிகமாகத் தூண்டும். இந்த கலவையானது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தமனி சேதம், கொழுப்பு படிதல், மாரடைப்பு, பிற இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
டீயுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகள், விந்தணு எண்ணிக்கை, ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இவை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் மலட்டுத்தன்மை, பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். காஃபின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து நீரிழப்பை ஏற்படுத்தும்.
தேநீர் வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டுகிறது. நிக்கோடின் வயிற்றுப் புறணியின் பாதுகாப்புத் தடையை பலவீனப்படுத்துகிறது. இந்த ஆபத்தான கலவை செரிமானப் பாதையை அரிப்பு, தொற்றுக்கு ஆளாக்குகிறது. இதனால் வலிமிகுந்த புண்கள் ஏற்படுகின்றன.
வெறும் வயிற்றில், தேநீரும், சிகரெட் சேரும்போது தலைவலி, தலைச்சுற்றல், நினைவாற்றல் குறைவுக்கு வழிவகுக்கும். நிக்கோடின் மற்றும் காஃபின் இரண்டும் ரத்த நாளங்களை சுருக்கி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். அவை ரத்த உறைவு உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இது முக்கிய தமனிகளைத் தடுத்து பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தூண்டும்.
