சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தாளவாடி வனச்சரகத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில், விவசாயி சுப்பிரமணியின் கரும்பு தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள் புதன்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டன.

இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை, கரும்பு வெட்டும் பணிக்கிடையே ஒரு சிறுத்தை குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தினர். ஞாயிறு அதிகாலை தாய் சிறுத்தை வந்து குட்டியை கவ்விச் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.

அதே கரும்பு தோட்டத்தில் மேலும் மூன்று குட்டிகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் தாய் சிறுத்தை மீண்டும் வருகிறதா எனக் கவனிக்கப்படுவதாகவும், குட்டிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் அடிக்கடி நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.