கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டசபை தொகுதி வாரியாக ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்குகிறார். அதன்படி கோவையில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, 23ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

கோவையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, வடக்கு சட்டமன்ற தொகுதி, தெற்கு சட்டமன்ற தொகுதி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதில் விவசாயிகள் சந்திப்பு, ரோடு ஷோ, பொதுமக்களிடையே உரையாடுகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் வருகையை முன்னிட்டு, கோவை அதிமுக தொண்டர்கள் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை நீதிமன்ற வளாகம் முன்பு அதிமுக பேனர் வைக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திள்ளது.