கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், அமைக்கப்பட்டு வரும் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானத்தின் கட்டுமானப் பணிகள் 50% நிறைவடைந்துள்ளன.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 27 அன்று ஹாக்கி மைதானத்திற்கான அடிக்கல் நாட்டினார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 7.02 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சான்றளிக்கப்பட்ட செயற்கை புல்வெளி 6,500 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்க மற்றும் உடை மாற்றும் அறைகள், ஆறு ஸ்டேடியம் மாஸ்ட் விளக்குகள் மற்றும் ஆறு யூனிட் பாப்-அப் ஸ்பிரிங்க்லர் அமைப்பு ஆகியவை இடம்பெறும்.
பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க கேலரி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டப் பணிகளில் புல்வெளி அமைத்தல், விளக்குகள், வேலி அமைத்தல், தெளிப்பான் அமைப்பு மற்றும் துணை உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். ஆறு பாப்-அப் ஸ்பிரிங்க்லர் அலகுகள் நிறுவப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளன. புல்வெளிப் பகுதியைச் சுற்றி 350 மீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு டக்அவுட்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆறு ஸ்டேடியம் மாஸ்ட் லைட் கம்பங்கள் ஒவ்வொன்றும் 17 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். ஒவ்வொன்றிலும் 500 வாட் திறன் கொண்ட 20 எல்இடி விளக்குகள் பொருத்தப்படும்.
டிரஸ்ஸிங் ரூம், கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் தொட்டியின் கட்டுமானம் நடந்து வருகிறது. இவை ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன், கட்டுமான பணியை முடித்து மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
